Today is Friday 2021 Oct 22
கொரோனா, பள்ளிக்கூடம், மாணவர்கள், தமிழக அரசு, உயர்நீதிமன்றம், Corona, School, Students, TamilNadu Government, High Court
பதிவு: 2021-08-31 15:12:12

"மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்" என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், நாளை முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லுரிகளிலும் நேரடி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதால் கொரோனா தொற்று அதிகரிக்க செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனிடையே கொரோனா 3ம் அலை பரவுக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதே வேளையில் 9 -12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தற்போது சாத்தியமில்லை. ஆசிரியர்களும் முழுமையாக தடுப்பூசிகள் போடவில்லை. எனவே நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல நேர்ந்தால் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகளையும் தொடர உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும், மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் எனக்கட்டாயம் இல்லை. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும்.ஒவ்வொரு வகுப்புகளிலும் 50%க்கும் குறைவான மாணவர்களையே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது" என்று கூறினார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், அனைத்து நிபுணர்களுடனும் அரசு ஆலோசித்த பிறகே பள்ளிகள் திறக்க முடிவு எடுத்துள்ளதாக கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...