Today is Wednesday 2022 Jan 19
தமிழக அரசு, பொன்னுசாமி, முதல்வர் ஸ்டாலின், TamilNadu Government, Ponnusamy, Chief Minister Stalin
பதிவு: 2021-11-27 13:41:55

``அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பால் முகவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" என்று முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரெட் அலர்ட்டா..?, கனமழையா, மிக கனமழையா..?, பெருவெள்ளமா..?, அல்லது கரோனா போன்ற பெருந்தொற்றுக் காலமா..? அது எதுவாகினும் பொதுமக்களுக்கு பால் தங்கு தடையின்றிக் கிடைப்பதற்காகத் தங்களை வருத்திக் கொண்டும், தங்களது உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமலும் கடுமையாக உழைப்பவர்கள் பால் முகவர்கள். ஆனால், தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய எங்களது உழைப்பைக் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு முற்றிலுமாகப் புறக்கணித்ததோடு, துளியளவு கூட கண்டு கொள்ளவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் பணியில் மனநிறைவோடு செயலாற்றி வரும் பால் முகவர்களாகிய எங்களது நியாயமான நீண்டகாலக் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு அங்கீகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பால் கொள்முதல் விலை கிடைக்கவில்லை அல்லது ஆவின், தனியார் பால் நிறுவனங்களில் கொள்முதல் மறுக்கப்படுகிறது என்கிற போதெல்லாம் தங்களது வாழ்வாதாரம் காத்திட பால் உற்பத்தியாளர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கு சாலைகளில் பாலைக் கொட்டிப் போராடியதுண்டு. ஆனால் ஆண்டு முழுவதும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற அடிப்படையில் செயலாற்றி வரும் தங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி எந்தச் சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையற்ற பால் விநியோகம் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே.

உயிர்க்கொல்லி நோயாக விளங்கும் கரோனா நோய் பெருந்தொற்றுக் காலத்தில் கூட மக்களை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்திய போதும், பால் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூடப் பாதுகாப்பாக வீடுகளுக்குள் முடங்கிப் போயிருந்த நேரத்தில் மக்களுக்கு பால் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்கிற ஒரே நல்லெண்ண அடிப்படையில் காவல்துறையின் அடக்குமுறை, அத்துமீறலையும் சகித்துக் கொண்டு, எங்களது குடும்பத்தினர் நலனையும் கடந்து தொடர்ந்து பால் விநியோகம் செய்து மனநிறைவடைந்தவர்கள் பால் முகவர்கள்.

கனமழையாலும், பெருந்தொற்றாலும் ஏற்படும் பேரிடர்க் காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் மக்கள் நிம்மதியாக உறங்கும் நேரத்தில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களும், தெரு நாய்கள் படுத்திருப்பதும் தெரியாத கும்மிருட்டு நேரத்தில் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழலிலும் கூட கண் விழித்துச் செயலாற்றும் பால் முகவர்களை இதுவரை இருந்த அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்திருப்பதால் தங்களின் ஆட்சியலாவது பால் முகவர்களை முன் களப்பணியாளர்களாக அங்கீகரித்து, ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி அனைத்து பால் முகவர்களுக்கும் இந்த கனமழை பேரிடர் காலத்திலாவது உதவித் தொகை வழங்கிட ஆவன செய்திட வேண்டும்.

மறைந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தில் பால்வளத்துறையும் உருவாக்கப்பட்டதோடு மட்டுமின்றி பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு நலவாரியங்களும் அமைக்கப்பட்டன. அந்தப் பெருமை மிக்க தலைவரின் வாரிசாக அவர் வழியில் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று தங்களின் தலைமையில் நடைபெறும் ஆட்சியிலேயே பால்வளத்துறைக்கு என தனி நலவாரியம் அமைத்து தந்தையின் வழியில் மகன் என்பதை நிரூபித்து தமிழகம் முழுவதும் பால் விநியோகம், உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...